October 13, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் நெல் கொள் முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களிலும், மற்ற பகுதிகளிலும் குறுவை சாகுபடி முடிவடைந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் தடுமாறி வருகின்றனர். நடப்பாண்டிற்கான கொள்முதல் விலையை அரசு இன்னும் அறிவிக்காததும், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததும் தான் இதற்கு காரணமாகும்.
குறுவை சாகுபடி வழக்கமாக செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என்பதால், அந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் காவிரி பாசன மாவட்டங்களிலும், மற்ற பகுதிகளிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் போதிய அளவில் திறக்கப்படும்.
நெல்லுக்கான கொள்முதல் விலையையும் செப்டம்பர் மாத இறுதியிலேயே தமிழக அரசு அறிவிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நெல் கொள்முதல் விலை மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு குறித்து இன்று வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் தமிழகத்தில் எங்கும் நேரடி நெல் கொள்முதல் தொடங்கப்படவில்லை.
குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் வங்கிகளிலும், தனிநபர்களிடமும் கடன் வாங்கித் தான் செய்திருப்பார்கள். நெல்லை அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான் கடனை அடைப்பார்கள்.அதுமட்டுமின்றி, குறுவை சாகுபடி மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான் தீப ஒளி திருநாளை, வெகுசிறப்பாக இல்லாவிட்டாலும், பெயரளவுக்காவது கொண்டாட முடியும். ஆனால், தமிழக அரசின் நேரடி கொள்முதல் தொடங்காததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். நெல்லை விற்பனை செய்ய முடியாததால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.
தீப ஒளி திருநாளுக்கு இன்னும் 15 நாட்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை என அடுக்கடுக்கான சிக்கல்களில் தமிழக விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர். குறுவை சாகுபடி நெல்லை சேமித்தும் வைக்க முடியாது. அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், திறந்த வெளியில் சேமித்து வைத்தால் மழையில் நனைந்து நெல் வீணாகும் ஆபத்து உள்ளது.
இவ்வளவு நெருக்கடியில் அக்டோபர் தொடங்கி 13 நாட்களாகி விட்ட நிலையில், இதுவரை நெல் கொள்முதல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் உழவர்கள் தடுமாறுகின்றனர். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் உழவர்களிடம் அடிமாட்டு விலைக்கு நெல் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளன.
சில உழவர்களும் வேறு வழியின்றி நெல்லை விற்கத் தொடங்கியுள்ளனர். அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்தாலே போதிய லாபம் கிடைக்காது எனும் போது, தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் உழவர்கள் நஷ்டமடைந்து கடன் வலையில் சிக்கும் ஆபத்துள்ளது.
நெல்லுக்கு கொள்முதல் விலை நிர்ணயிப்பதும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதும் பெரிய பணி அல்ல. அவை மிகவும் சாதாரணமான நடைமுறை தான். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதமே அறிவித்து விட்டது.
சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1470 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1510 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து விட்டது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத் தொகையை சேர்த்து அறிவித்தால் அது தான் கொள்முதல் விலை.
கடந்த பல ஆண்டுகளாக ஒரே அளவிலான தொகை தான் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதே தொகையையோ, அதை உயர்த்தியோ அறிவிப்பதற்கு அரசு இவ்வளவு தாமதம் செய்வது ஏன்? என்பது தெரியவில்லை.முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும் அரசு நிர்வாகம் எந்தவித இடையூறும், தடையும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால், சாதாரண அறிவிப்பை வெளியிடுவதற்கு கூட இவ்வளவு தாமதம் செய்வதிலிருந்தே அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு முடங்கிக் கிடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். நாளுக்கு நாள் காலம் கடந்து வரும் நிலையில், இனியும் காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் விலையை அறிவித்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க ஆணையிட வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை மிகவும் குறைவாக இருப்பதால் தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2500 வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.