May 7, 2016 தண்டோரா குழு
19 வயது மாணவியை ஆட்டோ ரிக் ஷாவில் கற்பழித்தது தொடர்பாக 3 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
திருவனந்தபுரத்தின் அருகிலுள்ள வர்காலா என்னும் இடத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவியை, செவ்வாய்கிழமையன்று ஆட்டோ ஓட்டுநரும் அவருடைய 2 தோழர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
பல பேரால் கற்பழிக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும்,
வலிப்பினாலும் பாதிக்கப்பட்ட அப்பெண் தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை அதிகாரி வினோத்தும் இதை உறுதி செய்துள்ளார்.
அதே போல், கொச்சியில் உள்ள பெரும்பாவூரில் சட்டம் படிக்கும் மாணவி தனது வீட்டில் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். பணியிலிருந்து வீடு திரும்பிய அவரது தாய், தன் மகள் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு பதறி காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளார்.
மருத்துவமனையின் அறிக்கைப்படி, மாணவியின் உடலில் 30 காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2 இதயத்தின் கீழ் ஆழமாகப் பதிந்துள்ளதாகவும், கூரிய பொருளால் குத்தியதால் குடல் பாகம் வெளியே துருத்திக்கொண்டு வந்துவிட்டதாகவும் அறியப்படுகிறது.
ஜிஷாவின் கொலைத் தொடர்பாகக் காவல்துறை, அருகிலுள்ள சிரவாமுட்டம் எனும் பகுதியிலுள்ள வட இந்திய தொழிலாளிகளைச் சந்தேகிக்கிறது.
இங்குள்ள தொழிலாளிகள் அனைவரும் வட இந்தியாவிலிருந்து குடி பெயர்ந்தவர்கள்.
கோட்டேயம் மாவட்டத்தில் உள்ள மூலிப்பரம்பு என்னும் இடத்தில் ஒரு வயதான தம்பதியரையும், அவரது மகனையும் குத்தி, அமிலத்தை ஊற்றிக் கொன்றது, அவரது தோட்டத்தில் வேலை செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி.
எனவே இந்தக் கொலைக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்தில் ஒரு அஸ்ஸாம் தொழிலாளியைக் கடுமையாக விசாரித்துள்ளனர்.
இவை அனைத்தும் நாட்டையே உலுக்கிய டெல்லியில் நடந்த நிர்பயாவின் கொலையை நமக்கு நினைவுபடுத்துகிறது.
கடந்த 2012 ம் ஆண்டு 23 வயதுப் பெண்ணை 5 பேர் சேர்ந்து ஓடும் பஸ்ஸில் பலாத்காரம் செய்து, கற்பழித்துக் கொலை செய்து வெளியில் தூக்கி எறிந்தனர்.
அதில் ஒருவன் இளங்குற்றவாளி என்ற காரணத்தினால் தீர்ப்பு முடிவாகவில்லை. மற்றொருவன் தற்கொலை செய்து கொண்டுவிட்டான். மற்ற மூவரும் தண்டனைக் காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி மாறலாம் என்று கருதப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து பல நிர்பயா சம்பவங்கள் நடப்பதற்குக் காரணங்கள் என்ன?
சட்டத்தின் ஓட்டைகளா? அல்லது மனித மனதின் வக்கிரமா?
உடலைப் பேணும் யோகா வகுப்புகளுடன், மனதைப் பேணும் ஒழுக்கம் சார்ந்த போதனை வகுப்புகளையும் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அரசு கவனிக்குமா?