• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்கத்தின் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும்: ராமதாஸ்

October 24, 2016 தண்டோரா குழு

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதில் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் இரட்டை நிலை கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் குறை கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதில் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் இரட்டை நிலையால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் முதலீடு செய்வதற்காக தங்கப் பத்திரங்களை வாங்குவோருக்கு வரி குறைக்கப்பட்டு மறைமுக சலுகை வழங்கப்படுகிறது. இந்த இரட்டை நிலை கண்டிக்கத்தக்கது.

மத்திய, மாநில அரசுகளின் வருவாயை அதிகரிக்க ஆக்கபூர்வமான வழிகள் ஏராளமாக உள்ளன. இருந்தாலும் அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது வரிக்கு மேல் வரி விதிப்பதையும், வரிக்கான தேவை நீங்கிவிட்டாலும் முடிந்தவரை வரியை வசூலித்து வருவாய் சேர்க்கும் வணிக அணுகுமுறையையும் தான் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீது ரூ.1.50 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி வரியை உயர்த்திய மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ள போதிலும், வரியைக் குறைக்க முன்வரவில்லை. தங்கத்தின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதி வரி விதிக்கப்பட்ட விஷயத்திலும் அதே அணுகுமுறையைத்தான் கடைபிடித்து வருகிறது.

2012 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வில்லை. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்ததாலும், உலகின் பல நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலையால் இந்தியாவின் ஏற்றுமதி சரிந்ததாலும் நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது.

2012-13 ஆம் ஆண்டில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4.7% ஆக, அதாவது ரூ. 5.29 லட்சம் கோடியாக அதிகரித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தங்கம் மீது 2% இறக்குமதி விதிக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக 10% என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது. பின்னர் தங்கத்தின் இறக்குமதி குறைந்ததால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகும், இந்த சுங்க வரி நீக்கப்படவில்லை.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டது. 2013 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரியின் தேவை 6 மாதங்களில் நீங்கி விட்டாலும், கடந்த 4 ஆண்டுகளாக அந்த வரியைப் பயன்படுத்தி மத்திய அரசு அதிக வருவாயை ஈட்டி வருகிறது. இதனால், மத்திய அரசுக்கும், தங்க வணிகர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும் நிலையில்,பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் இந்தியாவுக்குள் தங்கத்தைக் கடத்தி வருவது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. இதனால், மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் மீதான சுங்கவரியை நீக்கும்படி பலமுறை நான் வலியுறுத்தியும் அதனால் பயனில்லை.

தங்கம் மீது அதிக இறக்குமதி வசூலிக்கும் விஷயத்தில் இப்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுசேமிப்பு முதலீடுகளைத் திரட்டும் நோக்கத்துடன், ஆறாவது கட்ட தங்க பத்திரங்களை மத்திய அரசு திங்கள்கிழமை (அக். 24) வெளியிட்டுள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கத்திற்கு இணையான தங்கப் பத்திரத்தின் விலை ரூ.3007-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இப்போது திடீரென தங்கப்பத்திரத்தின் விலை ரூ.50 குறைத்து ரூ.2957 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தங்கப் பத்திரங்களுக்கு இறக்குமதி வரி 2% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பது தான். ஆனால், இந்த வரிக்குறைப்பு நகைக் கடைகளில் வாங்கும் தங்க நகைகளுக்கு வழங்கப்படவில்லை. அது மட்டுமின்றி, தீபாவளிக்குப் பிறகு தங்கப் பத்திரங்களுக்கு மட்டும் மேலும் 2% வரிக்குறைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஆனால், சந்தையில் விற்கப்படும் தங்கத்திற்கு, சுங்க வரிக்குறைப்பு செய்வது குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. தங்க பத்திரங்களுக்கு மட்டும் ஏதோ ஒரு பெயரில் வரிக்குறைப்பு; சலுகையை வழங்கி விட்டு, சந்தையில் விற்கப்படும் தங்கத்திற்கு வரியை குறைப்பது குறித்து நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடலாம் என அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் இந்த அணுகுமுறை நியாயமானதல்ல. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2% குறைக்கப்பட்டால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாயும், 4% குறைக்கப்பட்டால் 100 ரூபாயும் குறையும். மொத்தமாக நீக்கப்பட்டால் ரூ.250 குறையும். தீபாவளி மற்றும் அதைத்தொடர்ந்து வரும் விசேஷங்களுக்கு நகை வாங்கும் மக்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.

எனவே, தங்கம் மீதான வரியை நீக்குவதில் பாகுபாடு காட்டுவதை விடுத்து, தங்கப்பத்திரங்களுக்கு செய்யப்பட்டுள்ள 2% வரிக்குறைப்பை, சந்தையில் விற்கப்படும் தங்கத்திற்கும் நீட்டிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குள் தங்கம் மீதான 10% இறக்குமதி வரியையும் படிப்படியாக நீக்கி தங்கத்தின் விலை சவரனுக்கு 20,000 ரூபாய்க்கும் கீழ் குறைவதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க