September 14, 2016 தண்டோரா குழு
தொலை தொடர்பு துறையின் மிகபெரிய ஒருங்கிணைப்பாக ரிலையன்ஸ்- கம்யூனிகேஷன் நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைவதாக அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவையை கடந்த 5ம் தேதி அறிமுகம் செய்தார். மேலும், வாடிக்கையாளர்ககளை கவர்வதற்காக பல்வேறு சலுகைகளையும் அளித்து ரிலையன்ஸ் ஜியோ. இதனால் மற்ற தொலைதொடர்பு நிறுவங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், தொலைதொடர்பு துறையின் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் அனில்அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு துறையின் மிகபெரிய ஒருங்கிணைப்பாக கருதப்படும் இந்த இரு நிறுவனங்களுக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்ததின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள நிறுவனத்தில் இரண்டு நிறுவனங்களும் தலா 50சதவீத பங்குகளை வைத்திருக்கும்.
மேலும், இணைப்புக்குப் பிறகு இரு நிறுவனங்களின் மொத்த மதிப்பு 35 ஆயிரம் கோடியாகவும், கடன் மதிப்பு 28 ஆயிரம் கோடியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இணைப்புக்கு பிறகு இந்த நிறுவனம் 19 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்திய தொலை தொடர்பு துறையின் இரண்டாவது பெரிய நிறுவனமாக இது விளங்கும். தற்போது, 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.