October 13, 2016 தண்டோரா குழு
தமிழக சட்டசபையில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காவிரி பிரச்னை தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தமிழர்களை வஞ்சிக்கிறது. தமிழகத்தின் சார்பில் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் தரப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டும். பிறகு ஜனாதிபதியையும் நேரில் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தடையின்றி வழங்கவேண்டும் என வலியுறுத்த வேண்டும்.தமிழக சட்டசபை கூட்டத்தை கூட்டி உடனடியாக கூட்ட வேண்டும். தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விற்கு அது ஆதாரமற்ற தகவல் திமுக , காங்கிரஸ் ஒற்றுமையுடன் தான் உள்ளது என தெரிவித்தார்.