December 23, 2016 தண்டோரா குழு
பெங்களூரில் ரோபாட் உதவியுடன் நடந்த முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்தியாவில் புது தில்லி, அகமதாபாத் ஆகிய பகுதிகளில் ரோபாட்களின் உதவியுடன் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்று வருகிறன. எனினும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை இதுவரை அப்படி நடைபெற்றதில்லை.
இதனிடையே பெங்களூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் புதன்கிழமை (டிசம்பர் 21) முதல் முறையாக ரோபாட்டை வைத்து சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தென்னிந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.
இது குறித்து சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் தீபக் துபே செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“சரோஜித் அடக் என்னும் 35 வயது நோயாளியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கடந்த நான்கு ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரது மிகவும் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைய ஆரம்பித்துவிட்டது. இதனால் அவருடைய மாமியார் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார்.
ரோபாட் உதவியுடன் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. மனித மணிக்கட்டு 27௦ டிகிரிதான் சுற்ற முடியும் ஆனால் ரோபாட்வ இயந்திரத்தின் மணிக்கட்டு 36௦ எளிதில் சுற்றுவதால் இந்த அறுவைச் சிகிச்சையை ரோபாட்டின் உதவியுடன் எளிதில் செய்ய முடிந்தது.
தொப்புளைச் சுற்றி சிறியதாக வெட்டி தானம் செய்த சிறுநீரகத்தை வைத்து, சிறுநீரகத்தின் ரத்த நாளங்களை சிறுநீரகத்தோடு ரோபாட் இயந்திரத்தைப் பயன்படுத்தி துல்லியமாகத் தையல் இடப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
ரோபாட்டைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சை செய்வதால் நோயாளி மருத்துவமனையில் இருக்கவேண்டிய காலம் குறைக்கப்படுகிறது”
இவ்வாறு டாக்டர் தீபக் துபே கூறினார்.
சரோஜித் அடக் (35) செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த அறுவைச் சிகிச்சையை ரோபாட் கொண்டு செய்யலாம் என்று மருத்துவர்கள் எனக்கு ஆலோசனை கூறினார்கள்.
மேலும், இந்த அறுவைச் சிகிச்சைக்கு நான்தான் முதல் நோயாளி என்று அறிந்த போது, கலக்கமாக இருந்தது. இந்த அறுவைச் சிகிச்சையின் துல்லியமான விகிதத்தை குறித்து மருத்துவர்கள் எனக்கு உறுதிசெய்ததை அடுத்து அதற்கு அறுவைச் சிகிச்சைக்குச் சம்மதம் தெரிவித்தேன்” என்றார்.