December 1, 2016 தண்டோரா குழு
பழைய ரூ.500,1௦௦௦ நோட்டுகள் டிசம்பர் 2 வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் செல்லும் என்றும் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி நவம்பர் 8 ம் தேதி ரூ. 500,1௦௦௦ நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதையடுத்து, டிசம்பர் மாதம் இறுதிக்குள் வங்கிகளில் பழைய கரன்சியை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது .
எனினும் மக்களின் அன்றாட தேவைகளுக்காக பெட்ரோல் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும், மின்சாரக் கட்டணம் செலுத்தவும் நவம்பர் 24 ம் தேதி வரை பழைய ரூ. 500,1௦௦௦ நோட்டுகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்திருந்தது.
இந்நில்லையில் டிசம்பர் 15 வரை பெட்ரோல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு கால அவகாசத்தை நீடித்து அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது டிசம்பர் 2 மட்டுமே பெட்ரோல் வழங்கு நிலையங்களில் ரூபாய் நோட்டுகளைச் செலுத்தலாம் என வியாழக்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது:
பெட்ரோல் வழங்கும் நிலையங்களில் டிசம்பர் 2-ம் தேதி வரை மட்டுமே ரூ.500 ,1௦௦௦ நோட்டு பெற்றுக் கொள்ளப்படும். விமான பயணங்களுக்கும் 2-ம் தேதி இரவு வரை மட்டுமே பழைய நோட்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.
அதே போல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சில்லறை தருவதில் சிக்கல் ஏற்பட்டதால் நவம்பர் 11-ம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.