December 7, 2017 தண்டோரா குழு
சேலம் ரயில்நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனுக்காக பேட்டரியால் இயங்கும் கார் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் ரயில்நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனுக்காக பேட்டரியால் இயங்கும் கார் சேவைக்காக வெகு நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போது, இலவச சேவை வழங்க யாரும் விண்ணப்பிக்கவில்லை.
எனவே, ரயிலில் வந்து இறங்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு உள்ள இடங்களுக்கு போகவும், அது போல, அங்கிருந்து ரயில் பெட்டிகள் உள்ள இடத்திற்கு செல்லவும் உதவும் வகையில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துடன் கலந்து ஆலோசித்து கட்டண அடிப்படையிலான பேட்டரியால் இயங்கும் கார் சேவையை துவக்க ஆணையிட்டார்.
அதன்படி சேலம் ரயில்நிலையத்தில் நடைமேடை எண், 3 மற்றும் 4ல் பேட்டரியால் இயங்கும் கார் சேவை சேலம் கோட்ட வணிக மேலாளர் கே.மாது அவர்களால் சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் மற்றும் சேலம் ரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இந்த சேவைக்காக சென்னையை சேர்ந்த ஷட்டில் கார் நிறுவனத்துடன் 5 வருட காலத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்ததாரர் பேட்டரியால் இயங்கும் காருக்கான பராமரிப்பு, இயக்குநர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு பயணிக்கு ரூ. 10 என்ற வகையில் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. மூத்த குடிமக்கள், உடல் நலம் குன்றிய பயணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் வசதிக்காக துவக்கப்பட்டுள்ள இந்த பேட்டரியால் இயங்கும் காரில் ஒரு நேரத்தில் 4 பேர் பயணிக்கலாம்.
தங்களது கைப்பைகள் தவிர மற்ற பெட்டிகளை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. இந்த பேட்டரியால் இயங்கும் கார் சேவையை உபயோகிக்க விரும்பும் பயணிகள் சேலம் ரயில்நிலையத்தில் 08939806986 என்ற எண்ணை அழைக்க வேண்டும். வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் வழங்கப்படும் இந்த கார் சேவை ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்படும்.
மேலும்,இந்த சேவை விரைவில் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ரயில்நிலையங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.