• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கலப்பு இரட்டையர் டென்னிஸ் கால் இறுதியில் சானியா – போபண்ணா

August 13, 2016 தண்டோரா குழு

ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் பெற வாய்ப்புள்ள விளையாட்டுகளில் ஒன்றாக டென்னிஸ் கருதப்பட்டது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பயஸ், போபண்ணா ஜோடி ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே தோற்றது, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சானியா, தாம்ப்ரே ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

பின்னர் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவதற்குக் கலப்பு இரட்டையர் போட்டியையே பெரிதும் நம்பியிருந்தது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், ஜான் பீர்ஸ் ஜோடியை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் ஆக்ரோஷமாக ஆடிய சானியா, போபண்ணா ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜோடி கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. கால் இறுதிச் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஹீதர் வாட்சன் ஜோடியை எதிர்த்து இவர்கள் ஆடவுள்ளனர். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஆண்டி முர்ரே, ஹீதர் வாட்சன் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டேவிட் பெரர், கார்லா சுவாரஸ் நவாரோ ஜோடியை வீழ்த்தியது.

இந்த போட்டியைக் குறித்து நிருபர்களிடம் கூறிய சானியா மிர்சா, ஒலிம்பிக் போட்டியில் இந்திய ரசிகர்கள் எங்களிடம் இருந்து பதக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். பதக்கம் வெல்ல எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்வோம்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது எங்களின் மிகப்பெரிய கனவு. அடுத்த போட்டியில் இங்கிலாந்தின் பிரபல வீரரான ஆண்டி முர்ரேவை எதிர்த்து ஆடவேண்டி உள்ளது. இப்போட்டியில் ஜெயிக்க நாங்கள் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் பிரான்ஸ் வீரர் கில்ஸ் சைமனை 7-6 (7/5), 6-3 என்ற செட்கணக்கில் அவர் வீழ்த்தினார்.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த 2 மாதங்களாக நடால் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க