October 19, 2016 தண்டோரா குழு
சவூதி அரேபியாவில் வாலிபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை (அக். 18) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் டர்க்கி-பின்- சவுத் அல்-கபீர். இவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு தகராறில் அதெல்-பின்-சுலைமான் அல்-முகை மீது என்ற இளைஞரைத் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளவரசருக்கு 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சவூதி அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த மரண தண்டனை நிறைவேற்றத்தின் மூலம் பாதுகாப்பையும் நீதியையும் பாதுகாக்க அரசு ஆர்வத்துடன் இருப்பதை மக்களுக்கு உறுதிப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த மரண தண்டனை எந்த வகையில் நிறைவேற்றப்பட்டது என விளக்கப்படவில்லை. பொதுவாக, தலை வெட்டப்பட்டு தண்டனை நிறைவேறுவது நடைபெறும்.
சவூதியில் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது மிகவும் அரிதாகவும். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தன் மாமனும் அரசருமான ஃபைசலைத் திட்டமிட்டுக் கொன்ற குற்றத்திற்காக இளவரசர் ஃபைசல் பின் முஸைது அல் சவுது என்பவருக்கு அப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின் தற்போது அரசு குடும்பத்தைச் சேர்ந்த இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அளிப்பதில் பேர் போன நாடு என்பதை சவூதி அரேபியா மீண்டும் நிரூபித்துள்ளது.இளவரசரின் இந்த மரண தண்டனையானது அந்நாட்டில் நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 134-வது மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.