November 30, 2016 தண்டோரா குழு
நாடு முழுவதும் திரையரங்குகளில் படக்காட்சி தொடங்குவதற்கு முன் தேசிய கீதத்தைக் கட்டாயமாக இசைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே வேளையில் சுருக்கப்பட்ட தேசிய கீதத்தை இசைக்கத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சியாம் நாராயண் சவுஸ்கி என்பவர் தேசிய கீதத்தின் மீதான அவமதிப்பு என்பதை வரையறுத்துச் சொல்லுமாறு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘மக்கள் தங்கள் தாய்நாட்டின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும். நான் ஒரு இந்தியன் என்பதில் ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் பெருமைப்பட வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்கிருக்கும் சில கெடுபிடிகளைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால், இந்தியாவில் எந்தவித கெடுபிடியும் உங்களுக்குப் பிடிப்பதில்லை. தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் நாட்டு மக்கள் மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது, எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும்.
திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தைக் கட்டாயமாக இசைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத சினிமா திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.