August 9, 2016 தண்டோரா குழு
ரயில்வே நலவாரியத்தின் தலைவர் ஹச்.ராஜா தலைமையில் நாடுமுழுவதும் உள்ள நலவாரிய உறுப்பினர்கள் குழு கடந்த நான்கு மாதங்களாக இந்தியா முழுவதிலும் உள்ள குறைகளைக் கண்டறிந்து வருகிறது.
இந்நிலையில் வட மாநிலத்தில் உள்ள நூறு ரயில் நிலையங்களை ஆய்வு செய்து அறிக்கையை அந்த அந்த பொது மேலாளர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலும் ராஜா உள்பட 17 பேர் குழு ஆய்வு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, தென்மாவட்டங்களில் ஆய்வுகள் சென்னையில் இருந்து துவங்கப்படுகின்றன.
இன்று சென்னையிலும், நாளைக் கோவை மற்றும் பாலக்காட்டிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும் ரயில் நிலைய பாதுகாப்பிற்காக 120 நாட்களில் 100 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் 90 நாட்களில் முக்கியமான ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காகக் காவலர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் பரிந்துரைக்கப்படும் எனவும், இந்தப் பரிந்துரைகளின் பேரில் எடுக்கப்படும் நடவடிக்கையை ரயில்வே துறை அமைச்சர் அடுத்த கமிட்டி கூட்டத்தில் தெரிவிப்பார் எனவும் கூறினார்.