October 24, 2016 தண்டோரா குழு
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்ட வேண்டும், இது தேர்தலின் வெற்றிக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. காங்கிரஸ், ஆளும்கட்சியான சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் களமிறங்கியுள்ளன.
தேர்தல் முன்வைத்து தற்போது அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் , பிரசாரங்களைத் தொடங்கிவிட்டன. இது போன்ற கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி பல வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்ஷித் தெரிவித்தாவது:
உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்துள்ளார். அவர் நடத்திய பயணம், கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே போல் பிரியங்கா காந்தியும் பிரசார களத்தில் குதித்தால், எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு அனைத்தும் ஓட்டுகளாக மாறி விடும்.பிரியங்கா வந்ததும், எதிர்க்கட்சியினர் சிதறி ஓடி விடுவர்.
எல்லையில் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலை (சர்ஜிகல் ஸ்டிரைக்) அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சியை யாரும் விரும்ப மாட்டார்கள். இது உ.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்குப் பலனளிக்காது. பொது சிவில் சட்ட விவகாரம் மூலம் உ.பி., மக்களை மத ரீதியில் பிளவுபடுத்த பா.ஜ., முயற்சிக்கிறது என தெரிவித்தார்