November 2, 2016 தண்டோரா குழு
போபால் சிறைச்சாலையில் இருந்து தப்பிய 8 தீவிரவாதிகள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால், அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சி கூறியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேரும் ஒரு சில மணி நேரங்களிலேயே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அச்சம்பவத்தை கிராமவாசிகள் பலரும் நேரில் பார்த்துள்ளனர். அவர்கள் கூற்றின்படி என்கவுன்ட்டர் நடந்தபோது சிமி தீவிரவாதிகள் அவர்களை பிடிக்க வந்த காவல்துறையினர் மீது துப்பாக்கி தாக்குதல்கள் பயன்படுத்தவில்லை என்று அறியமுடிகிறது.
போபால் மத்திய சிறையில் சிமி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறைக்காவலரின் குடும்பத்துக்கு முதல்வர் சிவ்ராஜ் சவுகான் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்த நிலையில், கிராமவாசிகளின் இச்சம்பவத்தி
ற்கு கூறிய சாட்சி குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள சிலர், ‘சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகள், காவல்துறையினர் மீது கற்களை வீசினர், சபித்தனர், சில முழக்கங்களை எழுப்பினர், தாக்கி விடுவோம் என்று மிரட்டல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் காவல்துறைக்கு எதிராக துப்பாக்கி பயன்படுத்தவில்லை’ என்றனர். இறந்துகிடந்த தீவிரவாதிகள் அருகில் கத்தி கிடந்ததாக சிலர் கூறினர்.
அச்சர்புரா கிராமத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் பாதுகாவலர் ராம்குமார் சோனி கூறும்போது, “சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்த பகுதியில் 8 பேரை பார்த்தீர்களா? என்று காவல்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரித்தனர். எனக்கு அதை குறித்து எதுவும் தெரியாது என்று சொன்ன சில நேரத்திலேயே கிராமவாசிகள் என்னிடம் சந்தேக நபர்கள் உலவுவதாகக் கூறினர். உடனே நான் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தேன்.
அவர்கள் உடனடியாக இங்கு விரைந்து வந்தனர். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வாகனத்தை நிறுத்துவிட்டு, சந்தேக நபர்கள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கியிருந்த 8 பேரும் தப்பிக்க வழி இல்லாமல் சிக்கிக் கொண்டனர். முதலில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று தெரிவித்தார்.