June 29, 2016
தண்டோரா குழு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா(43). இவருக்குக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொண்டார். மேலும், தன்னுடைய நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இறை ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இறக்கும் தருவாயில் அருகில் இருந்த அனைவரிடமும் அனைவரும் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியவாறே உயிரிழந்தார்.
முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் உதடுகள் பல மணிநேரம் சிரித்தபடியே இருந்தது. இதையடுத்து சிரித்த நிலையில் உயிரிழந்த அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.