August 20, 2016
தண்டோரா குழு
காஞ்சிபுரம் அருகே தனியார் தொண்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களை மத்திய உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி விடுதியில் இலங்கையைச் சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்ட 55 இலங்கைத் தமிழர்கள்,சட்டவிரோதமாக எந்த ஒரு ஆவணமோ அல்லது அனுமதியோ இன்றி கடந்த மூன்று மாதங்களாகத் தங்கியுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு காவல்துறைக்குத் தகவல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்த மத்திய உளவுப்பிரிவு போலீஸார் இவர்கள் அனைவரும் தனியார் தொண்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அப்பகுதியைச் சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் படித்து வந்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்தனர்.
இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய உளவுப்பிரிவு காவலர்கள் இவர்களிடம் முறையான ஆவணம் இல்லாததால் பள்ளியிலிருந்து மாணவர்களை இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதால் அவர்களது படிப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.