November 22, 2016
தண்டோரா குழு
இடைத்தேர்தல் தோல்வி பற்றி கவலைப்படாமல் திமுக தொடர்ந்து ஜனநாயகப் பணியை ஆற்றும் என தி.மு.க. பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது.
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாயின. அதன்படி, தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் வெற்றி மூலம் அவர் தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து சென்னையில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
இடைத்தேர்தலின் தீர்ப்பை ஜனநாயக முறைப்படி ஏற்றுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பது திராவிட முன்னேற்ற கழகம். இருந்தபோதிலும் தமிழகத்தில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலைப் பொறுத்த வரையில் ஆளுங்கட்சியின் அராஜகம், அமைச்சர்களின் முறைகேடுகள், அதையும் தாண்டி பண விநியோகத்தைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாத நிலை இவற்றையெல்லாம் வைத்து ஆளுங்கட்சியான அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், வரக்கூடிய காலகட்டங்களில் அதிமுக ஒரு மிகப்பெரிய தோல்வியைத் தழுவ வேண்டிய ஒரு சூழ்நிலை நிச்சயம் வரும்.
இவ்வளவு அராஜகங்களையும், பண விநியோகத்தையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதபோதும் திராவிட முன்னேற்ற கழகம் இவ்வளவு வாக்குகள் பெற்றிருப்பது இதைத் தெளிவாக எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது.
திராவிட முன்னேற்ற கழகத்தைப் பொறுத்தவரையில் இந்த தோல்வி பற்றி கவலைப்படாமல் நிச்சயமாக மக்கள் பணியை, ஜனநாயக பணியைத் தொடர்ந்து ஆற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.