• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயர் நீதிமன்ற கண்டனத்திற்குப் பிறகாவது நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்

November 11, 2016 தண்டோரா குழு

மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமல்ல நீதித்துறைக்கே நிதி ஒதுக்குவதில்லை அ.தி.மு.க. அரசு என்பது இப்போது உயர் நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தெரிய வந்திருக்கிறது என தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை அமலில் இருக்கிறதா என்று அதிமுக அரசைப் பார்த்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பொருத்தமான கேள்வி எழுப்பியிருக்கிறது. அரசியல் சட்டத்தின் 360வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அ.தி.மு.க. அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார்.

மாநில அரசு பைனான்சியல் எமெர்ஜென்ஸி எதையும் அறிவிக்கும் உத்தேசம் இருக்கிறதா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் வரும் நவம்பர் 30-ந் தேதி தமிழக அரசின் நிதித் துறை செயலாளர் விளக்கமான பதிலை அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார் தலைமை நீதிபதி.
தி.மு.க. சார்பில் ஏற்கனவே 110-வது விதியின் கீழான அறிவிப்புகளும் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட திட்டங்களும் இன்னும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே இருக்கின்றன என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டப் பேரவையில் நானும், தி.மு.க. தலைவர் என்ற முறையில் கருணாநிதியும் நாட்டு மக்களுக்கு அடிக்கடி அறிக்கை வெளியிட்டு வந்திருக்கிறோம். மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமல்ல நீதித் துறைக்கே நிதி ஒதுக்குவதில்லை அ.தி.மு.க. அரசு என்பது இப்போது உயர் நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தெரிய வந்திருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நீதித்துறை மிக முக்கியமான தூண் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அந்த நீதித்துறைக்காக மத்திய அரசு ஒதுக்கிய 150 கோடி ரூபாய் நிதியை அதிமுக அரசு செலவிடாத காரணத்தால் அந்த நிதி மத்திய அரசுக்கே திரும்பிச் சென்றிருக்கிறது.

நீதித்துறை சார்பாக தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு அதிமுக அரசு ஒப்புதல் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதும் நீதிமன்றத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நீதித்துறைக்கு அறைகலன்கள் வாங்குவதற்கு கோரிய 9.41 கோடி ரூபாய் நிதியைக் கூட தமிழக அரசு வழங்காமல் நீதி பரிபாலனத்திற்கே சவால் விட்டு, நீதித் துறையைக் கேலி பொருளாக்கும் போக்கை அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் விரைந்து தீர்வு காண வேண்டியது மிக முக்கியம் என்று நீதித்துறை சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த நீதித்துறையின் உள் கட்டமைப்புப் பணிகளை நிறுத்தி வைக்கும் அளவிற்கு அதிமுக அரசு செயல்படுவது வேதனைக்குரியது மட்டுமல்ல. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நீதித்துறைக்கே முட்டுக்கட்டை போடும் முயற்சியாகும்.

இது போன்ற சூழ்நிலையில்தான் தமிழக அரசைப் பார்த்து “ ‘பைனான்சியல் எமர்ஜென்ஸி’யை அறிவிக்கப் போகிறீர்களா?” என்று கேள்வி கேட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். தமிழக அரசின் நிதி மேலாண்மை வரலாற்றில் இப்படியொரு கண்டனத்தை எந்த ஒரு அரசும் உயர் நீதிமன்றத்திடமிருந்து பெற்றதில்லை என்ற எதிர்மறை வரலாற்றைப் படைத்துள்ளது அ.தி.மு.க. ஆட்சி.

தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது என்றும் நான்கு லட்சம் கோடிக்கு மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றும் தி.மு.க. சார்பில் தொடர்ந்து சுட்டிக்காட்டி நிதி மேலாண்மையைச் சரி செய்யக் கோரியிருக்கிறோம்.

அப்போதெல்லாம், “நிதிநிலைமை நன்றாக இருக்கிறது. மாநிலத்தின் கடன் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது” என்று கூறி, “மரங்கள் சொல்லி காற்று வருவதில்லை. தேனீக்கள் சொல்லி பூக்கள் மலர்வதில்லை” என்றெல்லாம் ஏமாற்றுக் கவிதை பாடி முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பாராட்டு மழை பொழிவதில்தான் நிதியமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் கவனம் செலுத்தினாரே தவிர, மாநில அரசின் நிதி நிலைமையைச் சீர்படுத்த எள்ளளவும் முயற்சி செய்ய வில்லை.

இதன் விளைவாக “தமிழகத்தில் பைனான்சியல் எமெர்ஜென்ஸி அறிவிக்கப் போகிறீர்களா” என்று மாநில அரசைப் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இது போன்ற கண்டனத்திற்குப் பிறகாவது மாநிலத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்திட வேண்டும்.

சாமான்ய மக்கள் தங்களின் நியாயத்தை நிலைநாட்ட இறுதியாக நம்பியிருக்கும் நீதித் துறைக்குத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி சட்டத்தின் ஆட்சி மேலோங்குவதற்கு மாநில அரசு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க