February 1, 2017 தண்டோரா குழு
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது வேதனை அளிக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
2017-18ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் மக்களவையில் புதனன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 4வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். முதல் முறையாக பொது பட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட்டும் இணைந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும்,ஏழைகள், விவசாயிகள் நிலையை உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட சிறந்த பட்ஜெட் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தார்.
அதில் ” மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது வேதனை அளிக்கிறது, எய்ம்ஸ், நதிநீர் இணைப்பு போன்றவை பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. 100 நாட்கள் வேலைதிட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது.
மொத்தத்தில் 2017-18ஆம் ஆண்டிற்கான மத்தியபட்ஜெட் மாற்றமும், ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது ” என்றார் முக ஸ்டாலின்.