January 22, 2017 தண்டோரா குழு
நாட்டின் பிரதமர், தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது குடிமக்களாகிய நமது கடமை.எனவே போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்என காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசின் அறிவுரையின் பேரில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கி அவசர சட்டம் வந்திருக்கிறது. இது தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இதை நமது ஒற்றுமையின் முதல் படியாகக் கொண்டு சட்டரீதியாகவும், நாடாளுமன்ற ரீதியாகவும் நீண்ட கால நிரந்தர தீர்வுகளுக்கு பணியாற்ற வேண்டும்.
வரும் வாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
நாட்டின் பிரதமர், தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது குடிமக்களாகிய நமது கடமை. போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இது போன்ற ஒற்றுமை அவசியம் என்றாலும், இப்போதைக்கு ஜல்லிக்கட்டு தவிர்த்து வேறு பிரச்னைகளுக்கு போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம்.”
இவ்வாறு கார்த்திகேய சேனாபதி கூறியுள்ளார்.