October 25, 2016
தண்டோரா குழு
வங்கிக்கடன் மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள விஜய் மல்லையா தனது அயல்நாட்டு சொத்து விவரங்களை 4 வாரங்களில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையாவின் உள்நாட்டு சொத்துகள் அமலாக்க துறையினரால் முடக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை செவ்வாய்கிழமை (அக். 25) நடைபெற்றது. நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, “பிரிட்டன் நிறுவனமான டியாஜியோவிலிருந்து விஜய் மல்லையா பெற்ற 40 மில்லியன் டாலர் தொகைக்கான விவரங்களை அளிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.“ஏப்ரல் 7ம் தேதிய உத்தரவின்படி விஜய் மல்லையாவின் முழு சொத்து விவரம் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, அயல் நாட்டு சொத்து விவரம், 40 மில்லியன் டாலர்கள் தொகை விவரங்களையும் அளிக்க உத்தரவிட்டிருந்தோம். ஆனால், தெரிவிக்கப்படவில்லை என்று அறிகிறோம்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து இந்த 40 மில்லியன் டாலர் தொகை விவரங்கள் உட்பட அனைத்து அயல்நாட்டு சொத்து விவரங்களையும் மல்லையா தெரிவிக்க 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள் அடுத்த விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.