November 16, 2016 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவு தொடர்வதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாடாக ஜல்லிக்கட்டு போற்றப்படுகிறது. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்கின ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இதனால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த தடைக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இத்தடைக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் “குதிரைப்பந்தயங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. பட்டாசுகளுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்படுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பினர்.
இதற்கு விளக்கம் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ஜல்லிக்கட்டைப் பொழுதுபோக்காக நடத்த முடியாது, மத ரீதியான நிகழ்ச்சியாகவும் பார்க்க முடியாது; ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது. ஆகையால், தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என தெரிவித்தனர்.