August 9, 2016 தண்டோரா குழு
தனது மனைவியின் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டதால் தேனிலவுக்கு அழைத்துச் செல்ல முடியாத காரணத்தால் தனியாகச் சென்ற நபருக்கு உடனடியாக உதவ முன்வந்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
ஃபைசான் பட்டேல் என்பவர் தனது டிவிட்டர் கணக்கில் எனது மனைவி பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் அவரை தேனிலவிற்கு தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லை எனவும், அதனால் துருக்கி ஏர்லைன்சில் நான் தனியாக பயணிக்கிறேன் என்றும் தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனது மனைவியின் புகைப்படத்தை அவருக்காக முன்பதிவு செய்த சீட்டில் வைத்தபடி, இப்படித்தான் மனைவியோடு டிராவல் செய்கிறேன் என்ற ஒரு புகைப்படத்தையும், டிவிட்டரில் வெளியிட்டார். அதோடு, அதை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜின் வெளியுறவுத்துறை அமைச்சக டிவிட்டருக்கும் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. உடனடியாக சுஷ்மா சுவராஜிடமிருந்து அவருடைய டிவிட்டருக்குப் பதில் வந்தது. அதில் உங்கள் மனைவியை என்னைத் தொடர்பு கொள்ளச் செய்யுங்கள். உங்கள் பக்கத்து சீட்டில் மனைவியை அமரச் செய்கிறேன் என்று அதில் சுஷ்மா குறிப்பிட்டிருந்தார். மேலும், டூப்ளிகேட் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்துள்ளதாக மற்றொரு டிவிட்டிலும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சாமானிய குடிமகன் ஒருவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற முன்வந்த சுஷ்மா சுவராஜை வலைத்தள விமர்சகர்கள் பலரும் மிகவும் பாராட்டி மகிழ்கிறார்கள். மேலும், தனக்கு உதவி செய்த சுஷ்மா சுவராஜ் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று ஃபைசான் பட்டேல் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சுஷ்மா சுவராஜை டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு உதவிக் கேட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கு அவர் உதவிகளைச் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.