November 23, 2016
தண்டோரா குழு
2018-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் தொடங்கப்படும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவிடம் அளிக்க ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை மிகவும் ரகசியமாகப் பாதுகாத்து வருகிறது. இதனால், கறுப்புப் பணம் பதுக்குவோரின் விவரங்களைத் தருமாறு இந்தியா பலமுறை கேட்டும் பெற முடியவில்லை.
மத்திய அரசின் முயற்சியால் சுவிட்சர்லாந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவிடம் தர தற்போது ஒப்புக்கொண்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச அளவில், தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் பரிமாறிக்கொள்ள சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி இருநாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள பிறநாட்டினரின் வங்கிக் கணக்கு விவரங்களை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து திரட்டும்.
அதன்படி 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சுவிட்சர்லாந்து தன்னிடம் உள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவுக்கு அளிக்கும். இதே போல இந்தியாவும் தன்னிடம் உள்ள ஸ்விஸ் நாட்டவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டிடம் அளிக்கும் என்று நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.