October 5, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இந்நிலையில்,இதை எதிர்த்து திமுக சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய ஒதுக்கீடு இல்லை என தொடரப்பட்ட அந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 3 அரசாணைகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேபோல் தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன் புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பட்டிருந்தார்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மனு மீது நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.