November 17, 2016 தண்டோரா குழு
வங்கக் கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி குமரிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டது. எனினும், மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் தாக்கத்தால் தமிழகம் புதுவையில் அடுத்த 2 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்தால், அதன் தீவிரத்தைப் பொருத்து மழை அதிகரிக்கக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை ஒரு சில நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.,
புதன்கிழமை காலை நிலவரப்படி சென்னை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக, 20 மி.மீ. மழையும், சேரன்மகாதேவி, தூத்துக்குடி, சீர்காழி ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வகம் தெரிவித்தது.