December 11, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தின் ஓவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என்றும், அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் உத்திரவிட்டது. இதையடுத்து, இந்த உத்திரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க இடைக்கால தடை விதித்து உத்திரவிட்டது. மேலும், எதிர் மனுதாரர் 11 வாரத்தில் விளக்கமளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.