November 11, 2016
தண்டோரா குழு
தொலைக்காட்சி சேனல்கள் ஆண்டுதோறும் தங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்துள்ளோம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.
தில்லியில் பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தில் வெங்கைய நாயுடு வெள்ளிக்கிழமை பேசியதாவது:
ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் கறுப்புப் பணத்தைத் தவிர நாட்டில் வேறு எதுவும் முடங்கவில்லை.
கறுப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை வரலாற்றில் குறிப்பிடும் படியானது. இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை. ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றது திடீரென வந்த அறிவிப்பாகவும், நடவடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால், அதன் பின்னால், நீண்ட நாளைய செயல் திட்டம் உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையைச் சுயநலம் மிக்க சிலரைத் தவிர மற்ற அனைவரும் பாராட்டியுள்ளனர். நாட்டின் பொருளாதார நலன் கருதியே அரசு இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. கறுப்புப் பணத்தை தவிர, பஸ்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்தும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. மற்றபடி எதுவும் முடங்கவில்லை.
தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் படும் சிரமங்களை டிவி சேனல்கள் ஒளிபரப்புவதில் தவறில்லை. அதே சமயம் அந்த சிரமங்களை மட்டும் காட்டுவது நல்லதல்ல.
இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஆண்டுதோறும் தங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்துள்ளோம். மாநில தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கும் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.