July 15, 2016 தண்டோரா குழு
இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் தங்கள் படைக்கு பெரும்பாலும் சமூக வலைத்தளங்கள் மூலமே ஆள்சேர்ப்பர். மதத்தின் பெயரைச் சொல்லி உணர்வுப் பூர்வமாக வசியப்படுத்தி இளம் உள்ளங்களை வன்முறைக்குத் தூண்டி, மற்றவர்களை அழிப்பதே ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு எனப் போதித்து உலகத்தையே சுடுகாடாக்க கங்கணம்
கட்டிக்கொண்டு திரியும் இத்தீவிரவாதிகளின் முக்கியப் பிரசாரமேடையே சமூக வலைத்தளங்கள்தாம்.
மனதில் உறுதி இல்லாதவர்களும், உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்டவர்களும், வறுமைப் பிடியில் தவிப்பவர்களும், இவர்களது பேச்சில் மயங்கி விட்டில்பூச்சி போல மடியும் இளம் குருத்துக்கள் ஏராளம். புனிதமான இஸ்லாமிய மதத்தையும், திருக்குரானையும் தவறாக உபயோகித்து மனித நேயத்தை மண்ணோடு மண்ணாகச்
செய்யும் இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்லாமிய மதகுருக்கள் அதே மேடையில் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர். கல்கத்தா முஸ்லீம் மதகுருக்கள் திசைமாறிச் செல்லும் இளைய சமுதாயத்தினரை சரியான பாதைக்குத் திருப்ப உண்மையான இஸ்லாம் போதனைகளை அதே சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்ப முடிவெடுத்துள்ளனர்.
இஸ்லாம் ஒரு போதும் வன்முறையையும், கொலைகளையும், போதித்ததில்லை. சகோதரத்துவத்தையும், அமைதியையுமே வலியுறுத்தும். தவறான கருத்துக்களை எதிர்த்து உண்மையான கருத்துக்களை பலமொழிகளிலும் மக்கள் அனைவரையும் அடையும் படி செய்வதே தங்கள் நோக்கம் என்று வங்கதேசத்தின் மூத்த குருவான க்ஃஅரி
ஃபஸ்லுர் ரெஹ்மன் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக பிற மதத்தலைவர்களிடத்தும் கலந்த பின் ஒருங்கிணைந்த பிரசாரத்தை அரபிக், உருது, பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய பல மொழிகளிலும் உலகம் முழுவதும் சென்று சேரும்படி துவங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இத்தீவிரவாதிகள் இளம் பிராயத்தினரை பலவகையான வலைத்தளங்களின் மூலம் வசப்படுத்தி மனித இனத்தையே அழிக்கும் வெறிச்செயலுக்கு ஆளாக்குவர். சில தினங்களுக்கு முன்புகூட மொஹம்மெட் முசிருட்டின் என்ற இளைஞர் ஜமாட் உல் முஜஹிட்டென்(JMB) தீவிரவாத அமைப்பின் கீழ் பணிபுரிய காஷ்மீர் சென்றபோது
கைது செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டார்.
இவை மட்டுமின்றி பல மாநில இளம்பருவத்தினரும் தீவிரவாதப் படையில் சேர நாடு கடந்து சென்றுள்ளதும் உண்மையே. சமீபத்தில் கேரள மாநிலத்தில் பலரும் காணாமல் போனதற்குக் காரணமும் இதுவே என்றும் கருதப்படுகிறது.
தீவிரவாதப்படையில் சேர அனுமதியளிக்க மறுத்த தாயைக் கொன்று விடும்படிச் சொன்ன தலைவனும், அதன் படியே தாயைக் கொன்ற தனையனும் அடங்கிய இவ்வமைப்பின் போதனைகள் முற்றிலும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரணானதே.
ஆக முள்ளை முள்ளால் எடுக்கும் விதமாக உண்மையான இஸ்லாம் போதனைகளையும், நல்ல கருத்துக்களையும் பெருவாரியாகப் பரப்புவதன் மூலம், மீதமுள்ள இளைஞர்களைச் சிறந்த மனித நேயமுள்ள குடிமகன்களாக மாற்றலாம் என்பது இவர்களின் கணிப்பு.
இம்முயற்சி கூடிய விரைவில் அமுலாக்கப்படும் என்று வங்கதேசத்தின் மொத்த இஸ்லாமிய குருக்களின் அமைப்பின் செயலர் அக்டர் ஹொச்சைன் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவோரையும், மதபோதனைகளைத் திரித்துக்கூறுபவர்களையும் கண்டிப்பது மதகுருக்களின் தலையாய கடமையாகும், திருக்குரான் ஒரு போதும் ஹிம்சையை போதிக்காது என்பதை உலகறியச் செய்வதும் உண்மையான இஸ்லாமியரின் பொறுப்பு என்றும் ஹொச்சைன் கூறினார்.
சமூகவலைத்தளத்தில் இஸ்லாம் மதக்கோட்பாடுகளான அன்பு, சகோதரத்துவம், அஹிம்சை போன்றவற்றைப் போதிப்பதன் மூலம் அடிமட்டத்திலுள்ள நபர் வரைக்கும் இச்செய்தியைச் சென்றடையச் செய்யலாம். கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வலைத்தளம் பின்னிப் பிணைத்துள்ளதால் செய்திகளை எடுத்துச் செல்வது எளிது.
என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் மதத் தலைவர்களும், குருமார்களும் ஒவ்வொரு கிராமத்திற்கும்,
மதராஸாக்களுக்கும் சென்று மக்களுக்கு இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப்போவதாகவும் உறுதி கூறியுள்ளனர்.
2014ம் ஆண்டு நடந்த கக்ரகர் குண்டு வெடிப்பிற்குப் பின் பல மதராஸாக்கள் JMB அமைப்பிற்கு உடந்தையாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.