October 25, 2016 தண்டோரா குழு
உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே, மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை விற்பனை செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளால் விவசாயத்திற்குப் பாதிப்பு ஏற்படும். எனவே இதனை இந்தியாவில் அனுமதிக்க கூடாது எனக்கோரி இந்தியா முழுவதும் விவசாயிகள் பல கட்ட போராடங்களை நடத்தி வந்தனர்.
இதனிடையே, உரிய பரிசோதனைகள் செய்யாமல், மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் விற்கப்படுவதையும், விதைக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தக் கோரி ஒரு விவசாயி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதை விசாரித்த தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த விதைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்தது. ஆனாலும், சந்தையில் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் மறைமுகமாக விற்கப்படுகின்றன என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்த வழக்கு திங்கள்கிழமை (அக். 24) மீண்டும் விசாரணைக்கு வந்ததது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத் கூறியதாவது:
“உச்ச நீதிமன்ற அனுமதி பெறாமல், இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் விற்கப்படாது. அதே போல் விளைநிலத்திலும் பரிசோதனை செய்யப்படாது என்று உறுதியளிக்கிறோம்” என கூறினார்.
இதனை ஏற்ற நிதிபதி அமர்வு இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.