November 12, 2016
தண்டோரா குழு
ஆம்னி பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டன. இந்த அறிக்கையைப் படித்த உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டனர்.
இந்த வழக்கில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்காதது ஏன் என்று கேட்டு, அதற்குத் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
தனி நபருக்கான கட்டணத்தை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.