July 13, 2016 தண்டோரா குழு
பொதுவாக வீட்டில் குழந்தைகள் தவறு செய்யும் போது பெற்றோர்கள் அவர்களைத் தண்டிப்பது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு தண்டிக்கும் போது அவர்கள் மீண்டும் அந்தத் தவற்றை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறார்கள். பெற்றோர்கள் தண்டிக்கும் போது பிள்ளைகளும் தாங்கள் தவறு செய்தால் பெற்றோர்களுக்குப் பிடிக்காது என்று உணர்ந்து தவறு செய்வதைத் தவிர்த்து விடுகிறார்கள்.
ஆனால் சில வேளைகளில் பெற்றோர்கள் தண்டிக்கும் போது அது விபரீதமாகி விடுவதும் உண்டு. அதற்கு ஒரு உதாரணம் தான் ஔரங்கபாத் பாரதி மரணம்.
ஆறு வயது நிரம்பிய மகள் 1-15 வரையிலான எண்களைச் சரியாக சொல்லாத காரணத்தால் கோபம் அடைந்த தந்தை கொடுத்த தண்டனையில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஔரங்கபாத் நகரில் உள்ள பெலாபூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சஞ்சய் குட்டே(32), கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து ஒரு மாதமே ஆன அவரது 6 வயது மகள் பார்தியின் படிப்பைக் கண்காணித்துள்ளார். அப்போது 1 முதல் 15 வரையிலான எண்களைச் சரியாக சொல்லாமல் 11க்கு பிறகு 13 எனச் சொல்லியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர், பார்தியை தண்டிக்க ஒரு வெங்காயத்தை எடுத்து அவளுடைய வாயில் திணித்துள்ளார். மூர்க்கத்தனமாக செய்ததால் அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவளுடைய உடலை எடுத்துவந்து கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் அடக்கம் செய்துள்ளார் அவரது தந்தை.
பின்னர் இது குறித்து பார்தியின் தாய் தைரியமாகக் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். அவசர புத்தி மற்றும் தன்னுடைய ஆத்திரத்தைக் குழந்தைகள் மீது காட்டும் மனோபாவம் உள்ள பெற்றோர் உள்ளவரை இது போன்ற நிகழ்வுகளும், மாணவர்கள் தற்கொலை நிகழ்வுகளும் குறையாது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.