October 13, 2016
தண்டோரா குழு
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88) இன்று மரணமடைந்தார்.
தாய்லாந்து நாட்டின் மன்னரான பூமிபால் உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சிபுரிந்த மன்னர் என்ற சிறப்போடு காலமானார்.அவரது சகோதரர் ஆனந்த மகிதோல் மறைவுக்குப் பின்னர் கடந்த 1946ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னராகப் பொறுப்பேற்றார். சுமார் 70 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டின் மன்னராக இருந்துள்ளார் பூமிபால். அவர் அந்நாட்டு மக்களால் கடவுளாக போற்றப்பட்டார்.
தாய்லாந்து மன்னருக்கு சட்டரீதியாக அதிகாரம் இல்லாமல் இருந்தாலும், அமெரிக்காவில் பிறந்த பூமிபால் மக்களின் ஆதரவால் கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்ததார். இவரது மறைவிற்கு பின் தாய்லாந்து மன்னராக அவரது மகன் மகா வஜ்ஜிரலாங்கோன் பதவியேற்பார் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
மேலும், பூமிபால் மறைவுக்கு ஒரு வருடம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற தன்மை நிலவும் தாய்லாந்தின் ஆட்சியைக் கைப்பற்ற கடந்த 1932ஆம் ஆண்டு முதல் 19 முறை ராணுவப் புரட்சி நடைபெற்றுள்ளது. இதில், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முயற்சி உள்பட 12 முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவத்துள்ளார்