August 24, 2016 தண்டோரா குழு
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமின் 6 முகவரிகள் உண்மையானவை என்று ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
கடந்த 1993 மார்ச் 12ம் தேதி மும்பையில் 13 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.இதில் சுமார் 257 பேர் பலியாகினர் மேலும் 700 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டார் மும்பை நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத் இப்ராஹிம்.
பின்னர் பாகிஸ்தானுக்குத் தப்பியோடி அவர் பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் உதவியோடு அந்த நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.அவரை ஒப்படைக்குமாறு இந்திய அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் இதுவரை செவிசாய்க்கவில்லை.தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து வாதிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய உளவுத் துறையினரின் நடத்திய ரகசிய விசாரணைகளில் தாவூத் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.கராச்சி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு வீடுகள் உள்ளன.பாதுகாப்பு கருதி அவர் அடிக்கடி இடங்களை மாற்றி வருகிறார்.அந்த வகையில் 9 முகவரிகள் அடங்கிய பட்டியலை இந்திய உளவுத்துறை தயாரித்துள்ளது.
மேலும்,இந்தப் பட்டியலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாகிஸ்தான் அரசிடம் கடந்த ஆண்டு முறைப்படி சமர்ப்பித்தார்.ஆனால் இதனை பாகிஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.இதைத் தொடர்ந்து இப்பட்டியலை ஐ.நா. சபையில் இந்தியா சமர்ப்பித்துள்ளது.
அவற்றை ஆய்வு செய்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்,சந்தேகத்தின் அடிப்படையில் 3 முகவரிகளை மட்டும் நீக்கியுள்ளது.இதர 6 முகவரிகளை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.ஐ.நா. சபையால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புகள் அடைக்கலம் அளித்து வருவது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது என்று இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.