July 29, 2016
தண்டோரா குழு
உலக புலிகள் தினமான இன்று நாடு முழுவதும் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் புலிகள் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 2,226 எனவும், உலகளவில் உள்ள புலிகளில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும், 17 மாநிலங்களில், 49 வனவிலங்கு காப்பகங்களில் புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனவும், இதனாலேயே இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அறிக்கை கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.