February 25, 2017 தண்டோரா குழு
மேகதாது அணை உட்பட தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த கர்நாடக அரசின் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ரூ. 5912 கோடி செலவில் காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. அணைக்கான அனுமதியைப் பெற மத்திய நீர் வள ஆணையத்தை அணுக கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
காவிரி பிரச்சினை குறித்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வது தன்னிச்சையானது.
சக வடி நில மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல், அணைக்கட்டுக்கான நடவடிக்கைகளைக் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆகையால் மேகதாதுவில் அணைகட்டுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
மேலும், அணை கட்டுவதற்கான தொழில்நுட்ப அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது.”
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.