October 5, 2016 தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்திற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என மத்திய நீர்வளத் துறை செயலர் சசிசேகருக்கு, தமிழக அரசு தலைமைச் செயலர், ராமமோகன ராவ் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்,
காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும் என, தமிழகம் வலியுறுத்தி வருகிறது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு நாளில் அமைக்க வேண்டும் என செப்டம்பர் 30-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ள மனுவில், செப்டம்பர் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவில், திருத்தம் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை, தற்போது அமைக்க இயலாது என குறிப்பிட்டுள்ளது.மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு, உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழிக்கு எதிராக அமைந்துள்ளது. மத்திய அரசின் நிலைப்பாட்டில், ஏன் திடீர் மாற்றம் ஏற்பட்டது என்பது புரியவில்லை.
மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை, உடனடியாக திரும்ப பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்திற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.