December 6, 2016 தண்டோரா குழு
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) அதிகாலை 1.20 மணியளவில் பதவியேற்றார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 முதல் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை (டிசம்பர் 5) நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியாவதற்குச் சற்று முன்னதாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஒட்டுமொத்தமாக அனைத்து அமைச்சர்களும் ஒரே நேரத்தில் பதவியேற்றனர்.
முன்னதாக ஜெயலலிதாவின் மறைவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை வாசிக்க 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.