November 9, 2016 தண்டோரா குழு
நாடு முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகளில் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டை வெளிக்கொண்டு வரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் சில்லறைப் பிரச்னை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பல இடங்களில் தகராறும் ஏற்பட்டது. இதனை கருத்தில் சுங்க சாவடிகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வரும் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.