May 23, 2016 தண்டோரா குழு
ரயில் பயணம் என்பது எப்போதுமே ஒரு தனி சுகத்தைக் கொடுக்கும். விமானப் பயணம் எப்போதுமே அவசர கதியில் ஓடுபவர்களுக்கு மட்டுமே சரியான தேர்வாக இருக்கும்.
ஆனால் செல்லும் வழியில் உள்ள இயற்கை மற்றும் பலவகைப் பட்ட மக்களை ரசித்துக்கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தால் அதற்குச் சரியான தேர்வு ரயில்தான்.
அதனாலேயே பலர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் பலர் நிதி நிலைக்காகவும் ரயிலைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பலர் அந்த ரயிலில் கொடுக்கப்படும் உணவை வாங்கி உண்பது வழக்கம்.
குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் கொடுக்கப்படும் உணவு சுவையாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். ஆனால் பல ரயில்களில் சுமாரான உணவே கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் பயணி ஒருவர் கேட்ட சூப்பில் கழிவறை பைப்பில் வரும் நீரை ஒரு ஊழியர் கலந்தது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து மும்பை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ்ல் பயணம் செய்து கொண்டிருந்த சாரா எனும் பயணி, தனது உணவை ஆர்டர் செய்திருந்தார். அதில் தக்காளி சூப்பும் அடங்கும். எதேச்சையாகச் சாரா தக்காளிசூப் விற்கும் ஊழியர் ஒருவர் தனது சூப்பில் கழிவறைக் குழாயில் வரும் நீரை நிரப்புவதை கண்கூடாக பார்த்துள்ளார்.
மனம் ஒப்பாத அவர் நடந்த விஷயத்தை மற்ற பயணிகளிடம் தெரிவித்ததை அடுத்து, அனைவரும் சேர்ந்து கோழிக் கோட்டில் உள்ள ரயில்வே அதிகாரியிடம் எழுத்து மூலம் புகார் கொடுத்தனர். இதன் காரணமாக ரயில் 15 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.
இது குறித்து அவர் கூறும்போது, புகார் பெட்டியில் போடப்படும் புகார்கள் அனைத்தும் மாதக்கணக்கில் தேங்கியுள்ளன. எந்த ஒரு புகாரும் உரிய அதிகாரிகளிடம் சென்று சேர்வதில்லை எனத் தெரிவித்தார்.
அதில் சில புகார் கடிதங்கள் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததைப் பற்றியும், வேறு சில தலையணை உறைகளை, படுக்கை விரிப்புகள் பற்றியும் உள்ளன. அதுமட்டுமின்றி சில புகார்கள் சுகாதார விஷயங்களைப் பற்றியது.
ஆனால் இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் கண்காணிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், மக்களுக்கு வினியோகிப்பதற்கு முன்பு மேற்பார்வையாளர்கள் சுவைத்துப் பார்ப்பார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் புகார் கொடுத்தவர்கள் இங்குச் சுவை ஒரு பிரச்சனை இல்லை. சுகாதாரம் தான் பிரச்சனை எனத் தெரிவித்துள்ளனர்.
புகாருக்கு உள்ளான ஊழியர் கூறும்போது, தண்ணீர் தற்செயலாக விழுந்து விட்டது என்று விளக்கமளித்துள்ளார். ஆனால் அவர் மீதமாகும் சூப்பை மற்றவர்களுக்கு விற்று அதிக லாபம் பெரும் நோக்கத்துடனேயே இவ்வாறு நீரைக் கலக்குகிறார் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.