October 4, 2016 தண்டோரா குழு
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பி பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இது குறித்து பேசிய அக்கட்சியின் செயலாளர் ஆறுச்சாமி தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாததால், கர்நாடாகவில் பாஜக ஆட்சியை பிடிப்பதற்காகவே தமிழகத்தை வஞ்சிக்கும் செயலை செய்வதாக குற்றம் சாட்டினார். உடனடியாக காவிரி மேலாண்மையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட பத்து பேரை போலீஸார் கைது செய்தனர்.