January 5, 2018 தண்டோரா குழு
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் திருப்திகரமாக இல்லையெனில் வேறு வேலையை பார்க்கட்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில்,போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு வராவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தும் ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு பணிக்கு செல்லலாம் என்றும் கூறினார்.
அதைபோல் ,வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும்,வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் பதில் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.