July 4, 2016
தண்டோரா குழு
அறிமுகமான காலத்தில் அந்த மெல்லிய தேகமும், அழகான தோற்றமும் தான் அஜித்தின் அடையாளம் என இருந்தது. காதல் இளவரசனாக சில ஆண்டுகள் இருந்த அஜித் தனது மனைவி சாலினியுடன் இணைந்து நடித்த அமர்க்களம் படத்தில் ஒரு மனிதாபிமானமுள்ள நெகடிவ் ரோலில் நடித்தார். அதில் நடித்த ரவுடி கெட்டப் அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுக்கப் பின்னர் அதிகளவிலான படங்களில் ரவுடி மற்றும் அதிரடி ஆக்சன் பாத்திரங்களையே தேர்ந்தெடுத்தார்.
பின்னர் பல்வேறு சறுக்கல்கள், உச்சங்கள் என இருந்த நிலையில் மோட்டார் ரேஸில் கலந்துகொண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் பெருத்து அதற்கான கேரக்டர்களை தேர்ந்தெடுத்தார். பின்னர் பில்லா படத்திற்குப் பிறகு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமான மங்காத்தாவில் அவர் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி அலங்காரத்தில் நடித்தார்.
அந்தப்படம் அஜித்தின் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது. இதையடுத்து அவர் நடித்து வரும் அனைத்துப் படங்களிலும் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி அலங்காரத்திலேயே நடித்து வருகிறார். அவற்றில் வீரம், வேதாளம் ஆகியவை ஹிட் படங்களாக அமைந்தன. இதையடுத்து சால்ட் அண்ட் பெப்பர் அலங்காரம் மிகவும் பிரபலமானது. தற்போது இந்திய அளவில் மட்டுமின்றி
உலகளவில் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான கபாலி திரைப்படத்திலும் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் இந்த சிகைஅலங்காரத்திலேயே நடிக்கிறார்.
மேலும் ஆந்திராவில் கலக்கிவரும் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் டோலி திரைப்படத்தில் இதே சிகை அலங்காரத்துடன் நடித்து வருகிறார். மங்காத்தா சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் தற்போது தென்னிந்திய திரைப்பட சூப்பர்ஸ்டார்களிடம் பிரபலமடைந்து வருவது தல அஜித்தால் தான் என்பது மட்டும் உண்மை.