December 4, 2017 தண்டோரா குழு
தொப்பி சின்னம் ஒதுக்க கோரி டி.டி.வி தினகரன் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க உத்தரவிடக்கோரியும், ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். தரப்புக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியதை எதிர்த்தும்,டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, 100 பேர் தொப்பி சின்னத்தை கேட்டால், யாருக்கு அதை வழங்க முடியும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு, தொப்பி சின்னத்தை எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
பின்னர், தொப்பி சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என மாலை 4 மணிக்கு முடிவு செய்யப்படும் என உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் தொப்பி சின்னம் கோரி டி.டி.வி தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சுயேட்சை வேட்பாளர் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.