November 29, 2016 தண்டோரா குழு
யாருக்காவது பிறந்த நாள் நடைபெற்றால், “நூறாண்டு வாழ்க” என்று வாழ்த்துவோம்.நூறு ஆண்டுகள் வாழ்ந்து நிறைவுபெற்று, உற்சாகமாகத் தங்களது பிறந்த நாளை திங்கள்கிழமை (நவம்பர் 28) கொண்டாடியிருக்கிறார்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த இரு பெண்கள். அதுவும் கொண்டாட்டத்தின்போது ஒரே மாதிரி ஆடை அணிந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இங்கிலாந்தில் உள்ள ஸ்டூயர்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஐரின் க்ரும்ப் – ஃபைலிஸ் ஜோன்ஸ். 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி பிறந்தனர்.
இவர்கள் இருவரும் 25 நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். எல்லா வகையிலும் அதிசயமானவர்கள்.
ஒரே பள்ளியில் படித்து, ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து, ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர். அது மட்டுமல்ல, தற்போது இங்கிலாந்தின் ஒர்ஸ்டர்ஷைர் உள்ள ஸ்டௌர்பிரிட்ஜ் என்னும் இடத்தில் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, இந்த இரட்டையர் விழாவிற்கு இருவரும் ஒரே நிறத்தில், ஒரே மாதிரியான உடை அணிந்து வந்து ‘கேக்’ வெட்டி மகிழ்ந்தனர்.
தங்களது பிறந்த நாளைக் குறித்து இளைய சகோதரி ஐரின், “எங்களது 90 ஆவது, 99 ஆவது என்று சிறப்புக்குரிய பிறந்த நாட்களை ஒன்றாக இணைந்துதான் கொண்டாடினோம். அதைப் போலவே 100-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியதில் மிகவும் மகிழ்ச்சி!” என்றார்.
தாங்கள் நீண்ட ஆயுளுடன் உற்சாகமாக வாழ்வதற்கு, கடின உழைப்பு மற்றும் சிறந்த உணவே காரணம் என்றார் அவர்.
அவர்களுடைய பிறந்த நாள் விழாவில் 48 நண்பர்களும் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தங்கள் பிறந்த நாளுக்கு நினைவுப் பரிசுகள் வேண்டாம், ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நன்கொடை அளித்தால் போதும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.