August 6, 2016 தண்டோரா குழு
உத்திரபிரதேசம் கான்பூரைச் சேர்ந்த உறவினர்களான திலீப் யாதவ் (22) மற்றும் பங்கஜ் யாதவ் (24) இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்கள் இருவரும் மேலும் 4 பேருடன் மெயின்பூர் பகுதிக்குச் செங்கல் லோடு ஏற்றிச் சென்றுள்ளனர்.
அப்போது சோதனைச் சாவடியில் இவர்களின் வாகனத்தை மறித்த போலீசார், 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வாகனத்தை அனுமதிப்பதாகக் கூறியுள்ளனர். இதற்குத் தொழிலாளிகள் மறுத்ததால், அவர்களை போலீசார் தாக்கி உள்ளனர்.
இதில் டிரைவர் உள்ளிட்ட மற்றவர்கள் தப்பிச் செல்ல திலீப் மற்றும் பங்கஜ் இருவரும் போலீசிடம் சிக்கிக் கொண்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து கடுமையாகத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அவர்களின் உடல்களைக் குளம் ஒன்றில் போலீசார் போட்டுள்ளனர்.
குளத்தில் இருந்து 2 தொழிலாளர்களின் உடலைக் கண்டெடுத்த, அவர்களின் உறவினர்கள் போலீசாரிடம் கேட்டதற்கு, தாங்கள் அவர்களைத் தாக்கவில்லை எனவும், அவர்களும் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறி உள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர்கள் 6 போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அப்பிரச்சனை பெரிதானது. பின்னர் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.