November 9, 2016 பா.கிருஷ்ணன்
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பெண் காவலர்கள் வெவ்வேறு சம்பவங்களில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாயினர். பெண் காவலர்களுக்கே இக்கொடுமை நேர்ந்துள்ளது, மாநிலத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா நகர் என்ற இடத்தில் இருந்த பெண் காவலரை நரேந்திரா, பாபல் என்ற இருவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று இக்கொடுமையை நடத்தியுள்ளனர்.
“ஓர் உணவகத்தின் உரிமையாளரான பாபல் நடத்தும் உணவகத்தில் ஓர் அறையில் இக்கொடுமை நடந்திருக்கிறது” என்று காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் தெரிவித்தார்.
இன்னொரு சம்பவத்தில், காவலர் சத்யேந்திரா தனது சகாவான பெண் காவலரை மதுரா சந்திப்புக்கு வருமாறு அழைத்து, மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து, பாலியல் வன்முறை நடத்தினார் என்று அந்தப் பெண் காவலரே புகார் கூறியுள்ளார். சத்யேந்திரா தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும், அதை ஏற்க மறுத்ததாகவும் அந்தப்பெண் காவலர் கூறியுள்ளார்.
இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்து வருகிறது என்றும், 2010-11 ஆம் ஆண்டு முதல் 2014-15 வரையில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.