January 13, 2017 தண்டோரா குழு
2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 3.4 சதவீதம் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) தொழிலாளர்நலத் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா. சர்வதேச தொழிலாளர் கழகம் (ILO – United Nations International Labour Organization) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு 1.77 கோடிப் பேர் வேலையில்லாதவர்கள். இது 2017ம் ஆண்டில் 1.78 கோடியாக அதிகரிக்கும். 2018 ம் ஆண்டில் இது 1.8 கோடியாக உயரும். சதவீதத்தின் அடிப்படையில் வேலையில்லாத் திண்டாட்டம் 3.4 சதவீதம் அதிகரிக்கும். 2016 ம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாராட்டும்படி இருந்தது. தெற்காசிய நாடுகளில் அதிகபட்சமாக இந்தியாவில் 1,34 கோடிப் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்தாலும், உலக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் வெகுவாக அதிகரிக்கும். 2017 ம் ஆண்டு 5.8 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் 34 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.