August 29, 2016 தண்டோரா குழு
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் குட்டைப் பாவாடை உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
வட இந்தியாவின் உத்தரபிரதேஷ மாநிலத்தின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ராவில் செய்தியாளர்களிடம் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசும்போது,வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணிகள் இரவில் குட்டைப் பாவாடை உள்ளிட்ட சிறிய ஆடைகளை அணியக் கூடாது.அவர்கள் இரவில் தனியாகச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும்,வெளிநாட்டுப் பயணிகளிடம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.இந்தியக் கலாச்சாரமும்,மேற்கத்திய கலாச்சாரமும் வெவ்வேறானவை.இதற்காக நான் மேற்கத்திய கலாச்சாரத்தைத் தவறாகக் கூறவில்லை.ஆனால், இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தவே விரும்புகிறேன் என்று கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய சர்மா,ஆக்ரா,மதுரா,பிருந்தாவன் உள்ளிட்ட கோவில் நகரங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அறிந்த பின்னரே அவற்றை அணுக வேண்டும்.மேலும்,துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க,அப்படி நடந்தால் அச்சமயத்தில் உதவும் விதத்தில்,பயணிகள் தாங்கள் செல்லும் கார், ஆட்டோ ஆகிய வாடகை வாகனங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும்,வெளிநாட்டுப் பயணிகள் உள்ளூர் கார்களில் பயணிக்கும் போது அந்த காரின் எண்களை உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய கையேடுகள் விமான நிலையத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும்,இதில் பெண்களின் உடைகளுக்கான கட்டுப்பாடுகளும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.