August 3, 2016 தண்டோரா குழு
உத்திரப்பிரதேசத்து முன்னாள் முதலமைச்சர்கள் தாங்கள் வசிக்கும் அரசு மாளிகைகளைக் காலி செய்யும்படி உச்ச நீதிமன்றம் உதிரவிட்டுள்ளது. அதன்படி 6 முன்னாள் முதல் அமைச்சர்கள் 2 மாதத்திற்குள் தங்கள் மாளிகைகளைக் காலி செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயாம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி, பா.ஜ.க தலைவர் கல்யாண்சிங்க், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேலும் முன்னாள் முதல் அமைச்சர்களான N D திவாரி, ராம் நரேஷ் யாதவ் ஆகியோர் இதில் அடங்குவர்.
இவ்வரசு மாளிகைகள் அனைத்தும் லக்னோவின் ஆடம்பரமான பகுதிகளான விக்ரமாதித்யா மார்க் போன்ற இடங்களில் அமைந்துள்ளன.
பதவியில் இல்லாதபோது அரசு மாளிகையில் வசிக்கச் சட்டம் இடம் கொடுக்கிறதா என்ற கேள்வியோடு சமூக ஆர்வலர் லோக் ப்ரஹரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
சட்டப்படி அரசு மாளிகைகளில் முன்னாள் உறுப்பினர்கள் வசிக்க உரிமையில்லை எனவும், 2 மாதத்திற்குள் காலி செய்யவேண்டும் எனவும், பதவி முடிந்து அதிகப்படியாகத் தங்கிய நாட்களுக்கு வாடகை வசூலிக்கப்பட வேண்டும் எனவும் A.R. தேவ் தலைமையில் நடைபெற்ற நீதிமன்றம் அவரது கேள்விக்கு பதில் அளித்துள்ளது.
1997ம் ஆண்டு விதிப்படி முன்னாள் முதல் அமைச்சர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் அரசு மாளிகையில் வசிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
1981ம் ஆண்டு விதியின் படி உத்திரப்பிரதேச அமைச்சர்களின் சம்பளம், சலுகைகள், மற்ற வசதிகள் போன்றவற்றுடன் 1997ம் ஆண்டு விதிக்கப்பட்ட விதி சட்டப்படி இசையாதவையாக உள்ளபடியால் மேற்படி விதியில் திருத்தம் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பதவிக் காலம் முடிந்த 15 நாட்களுக்குள் அரசால் அளிக்கப்பட்ட குடியிருப்பைக் காலி செய்து விட வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார். அது மட்டுமின்றி பொது சொத்துக்கள் எந்த ஒரு தனி நபருக்கும் தகுந்த விலையின்றி பகிரப்படக் கூடாதென்றும் கூறினார்.